Friday, December 25, 2009

ஸ்ரீ மணக்குள விநாயகரின் ஸ்தல வரலாறு பகுதி-1

        மணற் குளத்து பிள்ளையார்

  புதுவையில் மிகவும் பழமை வாய்ந்த மற்றும்
சரித்திரச் சான்று பெற்ற ஆலயங்களுள்
முதன்மையானது -
அருள்மிகு ஸ்ரீ மணக்குள விநாயகர் ஆலயம்.

இவ்வாலயம் அரவிந்தர் ஆசிரம பகுதியில்,
கவர்னர் மாளிகை-தலைமை தபால் அலுவலகம்
அருகில் அமைந்துள்ளது.
இந்த தெருவை மணக்குள விநாயகர் கோவில் தெரு
என்றே அழைப்பர்.

கி.பி.15-ம் நூற்றாண்டுக்கு முன்னரே இக்கோயில்
எழுப்பப் பட்டிருக்க வேண்டும் என்று சரித்திர
சான்றுகள் தெரிவிக்கின்றன.
மணற்குள விநாயகர் என்று பெயர் வரக்காரணம்
-இக்கோயில் கடற்கரைக்கு அருகில் இருந்ததால்
அங்கு மணல் அதிகமாக இருந்ததாலும்,விநாயகர்
அம்மணற் பரப்பின் நடுவே இருந்த குளத்தின்
கரையில் இருந்ததாலும்-அவரை மணற் குளத்து
பிள்ளையார் என்றே அழைத்தனர் என்று தெரிய
வருகிறது. காலப்போக்கில் மணற் குள விநாயகர்
என்ற பெயர் மருவி மணக்குள விநாயகர் என்று
அழைக்கப் பெற்று வருகிறார்.


மணற் குளத்து ( மணல் குளம் ) அருகில் இருந்த
பிள்ளையாரை முரட்டாண்டி சாமியார் என்று
அழைக்கப் பெற்ற ஸ்ரீ தொள்ளைக் காது சித்தர் தான்
பூஜித்து வந்தார்.”வேதபுரம்”, ”வேதபுரி” என்று அழைக்கப்பெற்ற
இப்புதுவை பெரும்பகுதி காடாக இருந்த பொழுது,
மணற் குளம் என்று அழைக்கப்பட்ட குளக்கரையில்
எங்கிருந்தோ வந்த ஒரு ஆண்டி விநாயகர் சிலையை 
பிரதிஷ்டை செய்து தினமும் பூஜை செய்து வந்ததாக
ஆன்றோர்கள் கூறுவர்.
அந்த ஆண்டி தற்பொழுது “முரட்டாண்டி” என்று
அழைக்கப்படும் ஊரில் தங்கியிருந்து அங்குள்ள
அம்மனை தினமும் பூஜை செய்து வந்தவர்.
அங்கிருந்து ஐந்து மைல் தொலைவில் உள்ள
புதுவைக்கும் தினமும் நடந்து வந்து விநாயகரை
வழிபட்டு வந்துள்ளார்.
அவரின் முரட்டுத்தனமான செய்கையை கண்ட
மக்கள் அவரை “முரட்டு ஆண்டி” என்று அழைத்து
வந்தனர். காலப்போக்கில் அவர் தங்கியிருந்த ஊர்
அவர் பெயரைக் கொண்டே “முரட்டாண்டி சாவடி”
எனவும், ”முரட்டாண்டி” எனவும் வழங்கப்படலாயிற்று.
முரட்டு ஆண்டியின் காதில் பெரிய துளை
இருந்ததால் பின்னர் அவர் “தொள்ளைக் காது சித்தர்”
என அழைக்கப் பெற்றார்.

(ஸ்ரீ தொள்ளைக்காது சித்தரின் வரலாற்றை தெரிந்து
என்று கிளிக் செய்யுங்கள்.)

0 comments:

 
© free template